மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய சேதங்களையும், தமிழக அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகளையும் மதிப்பிடுவதற்காக மத்திய குழுவை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. புயல் சேதம் குறித்த இறுதி அறிக்கையை தமிழக அரசு சமர்ப்பித்ததும், தமிழ்நாட்டிற்கு அதே மத்திய குழு சென்று பாதிப்பு குறித்த விரிவான மதிப்பீட்டை தயாரிக்கும். அதோடு, மிக்ஜாம் புயல் மிகக் கடுமையானதாக கருதப்பட வேண்டுமா? என்பது குறித்தும் மத்திய குழு பரிந்துரைக்கும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி இந்தக் குழுவுக்கு தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் இருந்து புயல் பாதிப்புகளை மதிப்பிடும் பணிகளை மத்திய குழு தொடங்க உள்ளது. மத்திய குழுவுக்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.