திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் காதலியான 17 வயது சிறுமியுடன் திருச்சி, முக்கொம்பு பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த ஜீயபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சசிக்குமார், ரோந்து போலீசார் சங்கரபாண்டி, நவல்பட்டு காவல்நிலைய போலீசார் பிரசாத் மற்றும் துவாக்குடி காவல்நிலைய போலீசார் சித்தார் ஆகிய நால்வரும் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நால்வரும் இளம் காதல் ஜோடியிடம் தகராறு செய்த நிலையில், 17 வயது சிறுமியான அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், நால்வரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட நிலையில், நால்வரும் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.