இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இலங்கை கடற்படையினரால் கடந்த 9 மற்றும் 13-ஆம் தேதிகளில் 31 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், பாக் ஜலசந்தியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1983 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீனவர்கள் விடுதலைக்காக தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பிலும், உரிய நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்