சட்டவிரோத மணல் விற்பனை பற்றிய விசாரணைக்கு ஆஜராகும்படி ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் சட்டவிரோத மணல் விற்பனை நடைபெறுவதாக குற்றம்சாட்டி, வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை எனக் கூறி ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் பிழை உள்ளது என்றும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.