புழல் சிறை விவகாரம் .. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விக்னேஷ்வர் பெருமாளை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி மனுதாக்கல் செய்துள்ளார். அதில் 2 ஆயிரம் கைதிகளை அடைக்கக்கூடிய சிறையில் 3 ஆயிரம் பேர் இருப்பதாகவும், 60 கைதிகளுக்கு ஒரு கழிப்பிட வசதியே இருக்கிறது, கணவருக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் அடங்கிய அமர்வு, 60 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை மட்டுமே என்பது எப்படி முறையாக இருக்கும்? வண்டலூரில் கூட விலங்குகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன என தெரிவித்தனர். வழக்கு தொடர்ந்த கைதிகளை சிறை அதிகாரிகள் என்ன செய்வார்கள் என எங்களுக்கு தெரியும் என குறிப்பிட்ட நீதிபதிகள், இதுபோல வழக்கு தாக்கல் செய்யும் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககூடாது என அறிவுறுத்தினர். வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், சிறையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த கருத்துருக்களையும் தாக்கல் செய்யக்கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.