"சம்பளம் பிடித்தம்.. கேட்காவிட்டால் இறுதியில் டிஸ்மிஸ்" - பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல்
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களில் 20 ஆயிரம் பேருக்கு மட்டும் சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மற்ற இடைநிலை ஆசிரியர்களை போல் தங்களுக்கும் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி குறைவாக சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று முதல் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை அதிரடி திட்டங்களை வகுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, சம்பளம் பிடித்தம் செய்வது, பணி விதிமுறைகள் 20, 21, 22 ஆகியவற்றை மீறி போராட்டங்களில் பங்கேற்றது, 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை, இறுதியாக பணி நீக்கம் செய்வது என நான்கு வகையான திட்டங்களை கல்வித் துறை வகுத்திருக்கிறது. இவற்றை படிப்படியாக செயல்படுத்த அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது எனவும், அனுமதி கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.