தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்...வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, ஆட்சியர் அலுவலகம், கிரீன் சர்க்கிள் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சில பகுதிகளில் மழைநீருடன் சேர்ந்து கழிவு நீரும் சாலையில் ஓடியதால் மக்கள் அவதியடைந்தனர்.இதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவிய போதிலும் சாலைகளில் நீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.மேலும், திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, பேருந்து நிலையம், பெரியார் சிலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.