தமிழகம் முழுவதும் கலெக்டர்களுக்கு பறந்த லெட்டர் - தலைமைச் செயலாளர் அதிரடி மூவ்
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான "நான் முதல்வன் உயர்வுக்கு படி 2024 திட்டம்" குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் கடிதம் எழுதியுள்ளார்...
12ஆம் வகுப்பு தோல்வியடைந்த, அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் சேர வழிகாட்டுவது தான் இத்திட்டத்தின் நோக்கம்...
2023-24 கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது... இந்நிலையில் "நான் முதல்வன் உயர்வுக்கு படி 2024" நிகழ்ச்சிக்குப் பிறகு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படாத மாணவர்களைக் கண்டறிந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்தும் குறுகிய காலப் பயிற்சித் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றும்,
சமூக-பொருளாதார நிலைமைகளால் உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்களுக்கு நலத்திடங்கள் அளித்து உதவலாம் எனவும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்...
மாணவர்கள் யாரும் பின் தங்கி விடாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்வதோடு, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது...