தாமிரபரணி ஆற்றில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கலந்து வரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மனசாட்சியே இல்லையா? என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, நெல்லை நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் உள்ளாட்சி அமைப்புகள் பல ஆண்டுகளாக கழிவு நீர் கலக்கிறதே... இதை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மன சாட்சியே இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், கழிவு நீர் கலக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது மனது வலிக்கிறது என்றும் வேதனை தெரிவித்தனர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தொழிற்சாலைகள் நீர் வரி செலுத்த வேண்டியது நிலுவையில் உள்ளதா? என்பது குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இல்லை என்றால், தொடர்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.