சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருபவர்கள் மகேந்திர பி ஜெயின், ரமேஷ் குமார் மற்றும் ஜெயின் லால். சகோதரர்களான மூவரும் சேலம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் என்ற கம்பெனி நடத்தி வரும் நிலையில், மூவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மூவருக்கு சொந்தமான இடங்களில் சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், கணக்கில் காட்டப்பட்டாத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், ஜெயின் லாலின் மனைவி ரியல் எஸ்டேட் தொழில் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதன் எதிரொலியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக வெளியாகியுள்ளது. ஓட்டேரி, புரசைவாக்கம், கொத்தால்சாவடி, பூக்கடை, ஏழு கிணறு என சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில், சோதனையானது இரண்டாவது நாளாகவும் தொடரும் என கூறப்படுகிறது.