மோதிக்கொண்ட மாணவர்கள்.. பறிபோன உயிர்.. "முகத்தில் குத்திய மறு நொடியில் முடிந்த வாழ்க்கை"

Update: 2024-08-24 02:21 GMT

நவலடிபட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ஆகாஷ், வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி வளாகத்தில் மாலையில் ஆகாஷும், அதே வகுப்பில் படிக்கும் ரித்தீஸ் என்ற மாணவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ரித்தீஸ், ஆகாஷின் முகத்தில் குத்தியதால் ஆகாஷ் பள்ளியிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்த ஆசிரியர்களும், மாணவர்களும் ஆகாஷை உடனடியாக பவித்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாணவனின் உடலில் அசைவு இல்லாததால், அவரை எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, அவரது உடலை பிரோத பிரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஆகாஷை தாக்கிய ரித்தீஸ், அவரது தந்தை சுப்பிரமணி, சக மாணவர்கள், ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரை டி.எஸ்.பி ஆனந்தராஜ் , எருமபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு ஆசிரியர்கள், மாணவர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோரை போலீசார் அனுப்பி வைத்தனர். ரித்தீஸ் மற்றும் அவருடைய தந்தையிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்