"அவங்க மேல நடவடிக்கை இல்ல"..ஏன் வேலுமணி மேல மட்டும்? - அதிரடி காட்டிய சென்னை ஐகோர்ட்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க. நிர்வாகி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக, தி.மு.க.வைச் சேர்ந்த சூலூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2021ம் ஆண்டு, பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில், ரயிலில் கர்ப்பிணியிடம் தவறாக நடந்து கொண்டதாக, தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாக தெரிவித்திருந்தார். மானநஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ரயில் சம்பவம் குறித்து 2 நாளிதழ்களில் வெளியான செய்தி தவறானது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த நாளிதழ்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், எதிர்மனுதாரர் வேலுமணி மீது மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.