"பல கோடி.. அவர் அத தான் சொல்றாரு" - அடித்து நொறுக்கப்பட்ட சீட்டு கம்பெனி - திடீர் திருப்பம்..
திருவண்ணாமலை அருகே, தீபாவளி பொருட்கள் தராத சிட் பண்ட் நிறுவனத்தை, பாதிக்கப்பட்டவர்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாற்றில் இயங்கி வந்த பிரபல ஏ.பி.ஆர். நிதி நிறுவனம், பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை ஆரம்பித்து, தீபாவளி சிட் பண்ட் மற்றும் நகை பண்ட் நடத்தி, ஆயிரக்கணக்கான மக்களிடம் பணம் வசூல் செய்து வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், கடந்த சில நாட்களாகவே தீபாவளி சிட் பண்ட் கட்டிய நபர்களுக்கு, அந்த நிறுவனம் முறையாக பொருட்கள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், செய்யாறு புதிய காஞ்சிபுரம் சாலையில் உள்ள நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள் சிலர், அந்த நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த கட்டில், சோபா, ஏசி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக அறிவுறுத்தினர். எனினும், முறையான அறிவிப்பு வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறியதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.