புதுக்கோட்டை மாவட்ட வனபரப்பில் யூகலிப்டஸ் மரங்கள் நடுவதற்காக ஏற்படுத்தப்படும் தடுப்புகளால், விவசாயம், நீர் நிலைகளுக்கான தண்ணீர் வரத்து தடைபடுவதாக வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நாளுக்கு நாள் விவசாய நிலங்கள் குறைந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நாம் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கும் என தெரிவித்தனர். மேலும், துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்களை தற்போது இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உள்ள நிலையில், காகித ஆலை வேண்டுமா? அல்லது உணவு வேண்டுமா என கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, யூகலிப்டஸ் மரம் நடும் பணியால் நீர்வரத்து தடைபடுகிறதா என்பதை 6 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.