"99 மார்க் எடுத்த குழந்தை" - மோடியின் ரிவென்ஞ்...ராகுலின் ரியாக்ஷன்
எடுத்தது 100 க்கு 99 அல்ல 543க்கு 99 என்பதை குழந்தை புத்தி கொண்டவருக்கு யார் புரிய வைப்பது? என்று ராகுல் காந்தி குறித்து மக்களவையில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அனுதாபத்தை பெறவும், கவனத்தை ஈர்க்கவும், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குழந்தையை போல செயல்படுவதாக தெரிவித்த பிரதமர், அவரது செயல்பாடுகள் அனைத்தும் குழந்தைத்தனம் கொண்டவை என்றார்.
காங்கிரஸ் 99 இடங்களை மட்டுமே பெற்ற நிலையில், பாஜக படுதோல்வி அடைந்துவிட்டது போன்று தவறாக சித்தரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
கதையை கூறி விளக்கிய பிரதமர், தோல்வியில் சாதனை படைத்த குழந்தை ஒன்று, 99 மதிப்பெண் பெற்றுவிட்டதாக ஆணவத்தில் ஆடியதாக குறிப்பிட்டார்.
அந்த குழந்தை பெற்ற மதிப்பெண் 100 க்கு 99 அல்ல, 543க்கு 99 என, ஆசிரியர் புரிய வைத்ததாக குறிப்பிட்ட பிரதமர், இந்த உண்மையை குழந்தை புத்தி கொண்டவருக்கு யார் புரிய வைப்பது என ராகுல் காந்தியை கிண்டல் அடித்தார்.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக, தொடர்ந்து மூன்றாவது முறையும் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் கூட வெற்றி பெற தவறிவிட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி, இது காங்கிரசின் மூன்றாவது மிகப்பெரிய மோசமான செயல்பாடு என்று விமர்சித்தார்.