பீகார் மாநிலம் கிழக்கு சம்பரானில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, இந்தியா கூட்டணியை கடுமையாக விளாசினார். 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் 4 தலைமுறையினர் வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக விமர்சித்தார். 60 ஆண்டுகளில் பெரிய, பெரிய கட்டிடங்களை கட்டினார்கள், சுவீஸ் வங்கியில் கணக்கை தொடங்கினார்கள், அவர்கள் குழந்தைகள் எல்லாம் வெளிநாட்டில் படித்தார்கள் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, உங்கள் குழந்தைகள் படிக்க பள்ளிகூடம் கூட கட்டவில்லை என கூட்டத்தினர் மத்தியில் குற்றம் சாட்டினார். 5 கட்ட தேர்தலிலே இந்தியா கூட்டணி தோல்வியை தழுவிவிட்டது என குறிப்பிட்டவர், இந்தியா கூட்டணியின் பாவங்களோடு நாடு முன்னேற முடியாது, எனவேதான் தேர்தலில் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கு மக்கள் கடுமையான அடியை கொடுக்கிறார்கள் என்றார். ஜூன் 4 ஆம் தேதியும் ஊழல் செய்வோருக்கும், தாஜா அரசியல் செய்வோருக்கும், சிறு, சிறு கூட்டங்களுக்கும் பெரும் அடி இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.