வெடிக்கும் மகாவிஷ்ணு விவகாரம்.. HM-கள் சொன்ன அதிர்ச்சி பதில் - தலையை பிய்த்து கொள்ளும் அதிகாரிகள்
வெடிக்கும் மகாவிஷ்ணு விவகாரம்
HM-கள் சொன்ன அதிர்ச்சி பதில்
தலையை பிய்த்து கொள்ளும் அதிகாரிகள்
திணறவிட்ட தலைமை செயலர் கேள்விகள்
அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்னு சொற்பொழிவு நடத்திய விவகாரத்தில், தலைமை செயலரின் கேள்விக்கு கல்வித்துறை அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
அரசு பள்ளிகளில் சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்னு சொற்பொழிவு நடத்திய விவகாரம் குறித்தான விசாரணையை கல்வித்துறை அதிகாரிகள் முடுக்கி விட்டிருக்கின்றனர்..
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் நடந்து வரும் இந்த விசாரணை, இன்னும் நிறைவு பெற வில்லை...
இதனால், விசாரணை அறிக்கையும் திட்டமிட்டபடி அரசிடம் சமர்ப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது..
இந்நிலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், கல்வித்துறை அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார்..
கண்ணப்பன் உட்பட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி உள்ளனர்.
மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார் ?.... மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா... அல்லது, தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா? என கேள்வி எழுப்பிய தலைமை செயலாளர்... அல்லது 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தன்னிச்சையாக முடிவை எடுத்து நிகழ்ச்சியை நடத்தினார்களா? என கேட்டதற்கு அதிகாரிகளால் பதிலளிக்க முடியவில்லை என கூறப்படுகிறது...
ஏனென்றால், ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெரியாது என்ற பதிலை மட்டுமே கூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது..
இந்நிலையில், அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்...
இதனிடையே, இரு பள்ளிகளுக்கும் சொற்பொழிவற்ற மகா விஷ்னுவை அழைத்து வந்ததில், அசோக் நகர் அரசு பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் தமிழரசி முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது...
இதையடுத்து, தமிழரசியிடம் செல்போனில் விசாரணை நடத்திய கண்ணப்பன், விவகாரம் குறித்து 24 மணி நேரத்திற்குள் எழுத்துப் பூர்வமாக விளக்கமளிக்க கூறி கெடு விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.
மற்றொருபுறம், மகாவிஷ்ணுவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.