மதுரையில், கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் உள்ளிட்ட 9 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், மதுரையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் விடைத்தாள்களின் கையெழுத்துகள் ஒரே மாதிரியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்ததுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இரு மாணவர்களின் தேர்வு முடிவை நிறுத்தி வைத்த அதிகாரிகள், 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத ஏன் தடை விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனர். இதனை ரத்து செய்யக் கோரி மாணவரின் தந்தை கடந்த அக்டோபர் மாதம் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, 10 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த சிபிபிஐடி போலீசார், நேற்று, கல்வித்துறை அலுவலர்கள் 4 பேர், மாணவர்களின் பெற்றோர், மாணவர் ஒருவர் ஆகிய 9 பேரை கைது செய்தனர். ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு கல்வித் துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் மேலும் சிலரிடம் தீவிர விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.