அரசு அதிகாரிகளின் தவறுகள் மன்னிக்கப்படாது... நீதிமன்றம் இரும்புக்கரம் கொண்டு செயல்படும் என, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த காஜா மைதீன் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், மணப்பாறை புத்தாநத்தம் கிராமத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்றுமாறு நீதிமன்றம், கடந்த 2023 நவம்பர் மாதம் உத்தரவிட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்தனர்.
சட்டத்தை நிலை நாட்ட நீதிபதிகள் உறுதிமொழி எடுப்பதை போல தமிழக அரசு அலுவலர்கள் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் மன்னிக்கப்படாது என்றும்
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில் நீதிமன்றம் இரும்புக்கரம் கொண்டு செயல்படும் என்றும் குறிப்பிட்டனர்.
மணப்பாறை தாலுகா கோட்டாட்சியர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, அக்டோபர் 8-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.