குற்றாலம் விபத்து தொடர்பாக இரு துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் மாவட்டம் நிர்வாகம் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, அருவியில் குளித்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் விபத்துக்கு யார் காரணம் என்ற கோணத்தில் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சம்பவம் நடந்த அதே நேரத்தில் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருவிகளில் வெள்ளம் குறித்த அலெர்ட்டை முன் கூட்டியே வனத்துறை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய அருவியை பொருத்தவரை வெள்ள நீர் வரக்கூடிய பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் பொதுமக்கள் குளிக்கின்ற பகுதி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வெள்ள அலெர்ட் கொடுக்கப்பட்டதா ? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பழைய அருவியில் குளிக்கின்ற பகுதியில் முறையான தடுப்புகள் இல்லாததும் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.