கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் போலி என்சிசி முகாம் நடத்தி, 8-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி பயிற்சியாளர் சிவராமனை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு முன்பே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 23-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரு என்.சி.சி. பயிற்சி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் பள்ளியில் பணிபுரியும் கோபு, சிவராமனுக்கு போலி என்.சி.சி. முகாம் நடத்த அனுமதி அளித்தது, அதற்கான சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, இன்று காலை நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி கருணாகரன் என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இவர் முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததும், சிவராமனின் அலுவலகத்தில் இருந்த Hard Disk-ஐ எரித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.