பிரின்சிபால் மீது புகார் கொடுக்க வந்த ஆசிரியர்கள்.. ஆன்லைனில் ட்விஸ்ட் வைத்த பிரின்சிபால்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், போலியான வருமான வரித்துறை ஆவணங்களை வழங்கி ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக, ஆசிரியர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியை ஒருவர், வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்க முயற்சித்த போது, அவரது வருமான வரித்துறை ஆவணம் போலியானது என தெரியவந்தது. இந்த தகவல் சக ஆசிரியர்களுக்கும் பரவிய நிலையில், கடந்த 8ம்தேதி மாவட்ட கல்வி அலுவலரை நேரில் சந்தித்து, முறையிட்டுள்ளனர். வங்கியில் விசாரித்த போது, பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் வழங்கியது, போலியான செல்லான் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் 17 பேர், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணம் ஒன்றரை கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், தலைமை ஆசிரியர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே தலைமை ஆசிரியர் ஜான் கணேசும், ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தானும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இளநிலை உதவியாளராக பணிபுரியும் தங்க மாரியப்பன் என்பவர் மூலம், வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடமும், தலைமை ஆசிரியரிடமும், கல்வித்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.