வீட்டிற்கு தெரியாமல் அண்ணனை கல்யாணம் செய்த தங்கை - ரூமுக்குள் வைத்து உயிரை பறித்த `ஜிம் சகவாசம்'
கோவை கள்ளபாளையத்தை சேர்ந்தவர் கீதா. 26 வயதான இவர், இளம் பெண்களுக்கான ஜிம் பயிற்சியாளரான நிலையில், அவினாசி ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்திருக்கிறார். இவரும், சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூரை சேர்ந்த சரவணன் என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் உறவினர் என்றும், அண்ணன் - தங்கை முறை எனவும் கூறி இவர்களின் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருவரும் அறையெடுத்து தங்கியுள்ளனர். அப்போது, இளைஞர் சரவணன் மட்டும் வேகவேகமாக அறையில் இருந்து வெளியேறுவதை கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அறைக்குள் சென்று பார்த்தபோது, கீதா அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் விரைந்த போலீசார், இளைஞர் சரவணனை மடக்கி பிடித்திருக்கின்றனர். விசாரணையில், கீதாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவரை சரவணன் அடித்து கொன்றதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.