மணிப்பூர் மாணவர்கள் தமிழகத்தில் படிக்க தமிழ்நாடு அரசு உதவ வேண்டுமென, முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையிலுள்ள கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளின் பரிசளிப்பு விழாவில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் மாணவர்களுக்கு இடமளித்ததற்காக, அக்கல்லூரிக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், மணிப்பூர் மாணவர்கள் தமிழகத்தில் படிக்க தமிழக அரசு உதவ வேண்டுமென, முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், நமது வாழ்முறை, மொழி, கலை உள்ளிட்டவற்றில் அழுத்தம் தர சில சக்திகள் தயாராக இருப்பதாக கூறினார். மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் ஜனநாயகத்தை வாழவிடுவதை தவிர அச்சக்திகளுக்கு வேறு வழியில்லை என்பதால், மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.