ரூபாய் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கடந்த 28 ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தாலும், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதால் அவரால் வெளியே வர முடியவில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ள அமலாக்கத்துறை, அவரை டெல்லி சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. டெல்லி வழக்கில் ஜாமீன் கிடைத்து விட்டதால் சென்னை வழக்கில் தான் அவர் சிறைக்குள் இருக்கிறார். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.