ஆய்வுகளில் தப்பும் கம்பெனி..? பறிபோன உயிர் எமன் ரூபத்தில் 10 ரூபாய் குளிர்பானம் பெற்றோர்களே உஷார்..!
10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்து 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், தனியார் குளிர்பான கம்பெனியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.. ஏற்கனவே இந்த நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ள சூழலில் இதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..
கலர் கலரான பேக்கேஜிங், வெறும் 10 ரூபாய்க்கு கிடைக்கும் என்பதால் ஆசைப்பட்டு காலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் என எதையும் கவனிக்காமல் கூல்ட்ரிங்ஸ் குடிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு எச்சரிக்கை மணியாய் ஒலித்தது திருவண்ணாமலையில் அரங்கேறிய சம்பவம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, 5 வயதான காவியாஸ்ரீ என்ற சிறுமி மாம்பழ ஃப்ளேவர் கூல்ட்ரிங்ஸ்-ஐ குடித்த சிறிது நேரத்திலேயே, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அடுத்த ஓரிரு நொடிகளில் அந்த பிஞ்சு குழந்தையின் உயிர் துடிதுடிக்க பிரிந்தது...
இச்சம்பவம் பெருந்துயரில் ஆழ்த்திய நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல தனியார் குளிர்பான கம்பெனியில் மத்திய மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சூழலில் தான், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக இதே கம்பெனியின் குளிர்பானம் குடித்த 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சென்னை புதிய வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த 8 வயது சிறுவனும் அவனது 6 வயது தங்கையும் அருகிலிருந்த கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். காவியாஸ்ரீக்குக்கு நடந்தது போலவே, இந்த அண்ணன் தங்கையும் ரத்த வாந்தி எடுத்து உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த குளிர்பான கம்பெனியில் சோதனை மேற்கொண்டனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த கம்பெனியில் குளிர்பானத்தின் தரவரிசை, குளிர்பானத்தில் கலக்கக்கூடிய பொருட்கள், உள்ளிட்டவற்றை தீவிரமாக ஆய்வு செய்த பின், குளிர்பானம் தரப்பில் எவ்வித தவறும் இல்லை என கூறப்பட்டது..
இதன் பின்னர் அடுத்த ஆண்டும் ஆய்வுகள், சோதனைகள் அரங்கேறின.
ஆனால் தற்போது மீண்டும், அதே கம்பெனியின் குளிர்பானத்தை அருந்தி சிறுமி உயிரிழந்திருப்பது பலரையும் பதற வைத்திருக்கும் சூழலில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூட இதே கம்பெனியில் சோதனை மேற்கொண்டு எவ்வித குறைகளும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த நிறுவனம் மட்டுமன்றி, ஏற்கனவே பெசன்ட் நகரில் Togito என்ற குளிர்பானத்தை அருந்தி 13 வயது சிறுமி உயிரிழந்தார். இதே போல் கரூரிலும் குளிர்பானம் குடித்து சிறுமி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இப்படி கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற மலிவு விலை குளிர்பானங்களை குடித்து சிறுவர், சிறுமியர் பாதிக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருவதால், அனைத்து விதமான குளிர்பான கம்பெனிகளிலும் உரிய ஆய்வு மேற்கொண்டு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்..
எனவே இதுபோல் பிஞ்சு குழந்தைகளின் உயிரை பறிக்கும் குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.. இதுபோன்ற உயிர் பலி இனி எங்கும் நடக்கக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமும்...