மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.அவரது சமூக வலைதள பதிவில், மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் இருந்து ஆண்டுதோறும் 1000 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த ஆண்டு நீர் திறக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் குடிநீர், விவசாயத்திற்கு போதிய நீர் இல்லாததோடு, தேவையான தீவனம் கிடைக்காமல் கால்நடைகளை விற்கக்கூடிய அவலம் ஏற்பட்டதாகவும் பதிவிட்டுள்ளார். ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பிவிடும் என்பதால் நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையை தவிர்த்து, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.