ஒரே மேடையில் 20 கட்சித் தலைவர்கள் பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?பிரமாண்டத்துக்கு தயாராகும் திமுக

Update: 2024-09-28 08:56 GMT

ஒரே மேடையில் 20 கட்சித் தலைவர்கள்

பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?

பிரமாண்டத்துக்கு தயாராகும் திமுக

திமுக துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பவள விழாவை கொண்டாடுகிறது திமுக... அது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு

அறிஞர் அண்ணா அவர்களால் துவங்கப்பட்டு, முக்கால் நூற்றாண்டை கடந்துள்ளது திராவிட முன்னேற்ற கழகம். இந்த 75 ஆண்டுகால நெடும் பயணத்தை கொண்டாடும் விதமாக, அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ள நிலையில், திக தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 20 கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் கூட உள்ளனர்.

பொதுக்கூட்டத்திற்காக 500 அடி நீளம், 250 அடி அகலமும் கொண்ட பந்தல் அமைக்கப்பட்டு சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் போன்று அலங்கரித்து, அண்ணா வீட்டிற்குள் வருவது போல வழக்கமான தங்கள் கலை உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் திமுகவினர் .

கொள்கை கூட்டணி அமைத்துள்ள இயக்கத்தினரை இணைத்து விழா எடுக்க வேண்டும் என்பதால் அண்ணா பிறந்த மண்ணில் பவளவிழா கொண்டாடப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்திருந்தார். கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பு, அவ்வப்போது நடத்தப்பட்ட போராட்டங்கள் என திமுகவினர் சமீபத்தில் பலத்த விமர்சனத்தை சந்தித்தனர்.

கூட்டணி பற்றி மக்கள் மத்தியில், எதிர்மறையான தோற்றம் எழுந்த நிலையில், கூட்டணியின் உறுதியை சொல்லாமல் சொல்வதற்கே இந்த நிகழ்ச்சி என்று கூறப்படுகிறது.

இந்த பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவாரா? அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் பதவி உள்ளிட்ட கேள்விகள் திமுக தொண்டர்கள், அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது... எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகுமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்