பள்ளி முன் கண்டன ஆர்ப்பாட்டம்.. "பல வருட பிரச்சனை.." திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கின்றனர். இப்பள்ளியில் உள்ள இரண்டு கட்டிடங்களில், ஒரு கட்டிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு மறு சீரமைப்பிற்காக இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டிடம் காமராஜர் ஆட்சி காலத்தில் அமைச்சர் கக்கன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டிடம் இடிக்கப்பட்டதால் அங்கு படித்த மாணவ மாணவிகள் அருகில் உள்ள கலையரங்கத்திலும், மரத்தடியிலும் அமர்ந்து படிக்க வைக்கப்படும் அவல நிலை உள்ளது. இதனால் இங்கு பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. புதிய கட்டிடத்தை உடனடியாக கட்ட வேண்டி பொதுமக்கள் சார்பாக பள்ளியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் வருவாய்த்துறை, கல்வித்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.