வேலூர் மாவட்டம், ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஒரு மாணவனை மற்றொரு மாணவன் பிளேடால் கடுமையாக வெட்டியுள்ளான். இதில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு, ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் நடந்த போதிலும், ஆசிரியர்கள் உள்ளிட்ட யாரும் தடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசனுக்கு, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.