கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்திபுரத்தில் வணிக வளாகங்கள் அதிகம் நிறைந்த 100 அடி சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டு, சாக்கடை மூடிகள் மூடப்படாமல் உள்ளன. இதுகுறித்து பொது மக்களும் வணிக நிறுவன உரிமையாளர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வழியாக நடந்து சென்ற பெண் ஒருவர், திறந்து கிடந்த குழியை கவனிக்காமல் சென்று, குழிக்குள் தவறி விழுந்துள்ளார். கால் எலும்பில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் சாக்கடை குழிக்குள் விழும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.