பல ஆண்டு கனவு.. தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்
நீர்வளத் துறை சார்பில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அர்ப்பணிக்க உள்ளார். சென்னையில் இருந்து காணொலி மூலம் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.