குளத்தில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு - சிறுவனால் காக்கப்பட்ட இரு உயிர்கள்
கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் மகள் விஸ்வஜோதி, அரசு மேல்நிலைப்பள்ளியில் 7- ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை ஒட்டி, அவரது சகோதரி மகர ஜோதி மற்றும் தேவதர்சினி, ரவி பிரகாஷ் ஆகியோருடன் முத்தாளம்மன் குளத்தில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது விஸ்வஜோதி எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய நிலையில், உடன் இருந்தவர்களும் நீரில் மூழ்குவதை கண்ட சபரீஸ்வரன் என்ற 13 வயது மாணவன், குளத்தில் இறங்கி நீரில் மூழ்கிய விஸ்வஜோதி, தேவதர்ஷினி மற்றும் ரவி பிரகாஷ் ஆகியோரை மீட்க முயன்றார். ஆனாலும் விஸ்வ ஜோதி நீரில் மூழ்கி விடவே தேவதர்ஷினி மற்றும் ரவி பிரகாஷ் ஆகிய இருவரையும் பிடித்து இழுத்து மீட்டுள்ளார். விஸ்வஜோதியை மீட்க தாமதம் ஆனதால் அவர் இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.