பெண்களுக்கு எதிரான வழக்கில் தண்டனையை குறைக்க முடியுமா? - ஐகோர்ட் விளக்கம்
பெண்களுக்கு எதிரான பாலியல் அல்லாத குற்றங்களில், குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை குறைக்க குற்ற பேரத்தை கோரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவிக்கு சம்மன் அளிக்க வந்த நீதிமன்ற பெண் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தண்டனையை குறைக்கக் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்ற பேர மனுவை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றம் என்பதால்... குற்ற பேரம் கோர முடியாது என மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அல்லாத மற்ற குற்றங்களில் குற்ற பேரம் கோரலாம் என்று உத்தரவிட்டார். கீழமை நீதிமன்றங்கள் குற்றச்சாட்டு பதிவு செய்த முப்பது நாட்களுக்குள், குற்ற பேரம் தொடர்பான உரிமையை குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.