நீதிபதி லோகோவை போலியாக பயன்படுத்தி சென்னையில் வலம் வந்த கார்! கடைசியில் அம்பலமான பித்தலாட்டம்
சென்னையில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் போலி லோகோவுடன் சுற்றித்திரிந்த காரை, போலீசார் பறிமுதல் செய்து விசாரணை வருகின்றனர்.
சென்னை வடபழனி பகுதியில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் காரை உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், வாடகை முறையில் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அந்த காரில், உச்ச நீதிமன்ற நீதிபதி என்பதற்கான லோகோ பொறிக்கப்பட்டிருந்துள்ளது. இந்தநிலையில் அந்த நிறுவனத்தின் மேலாளர் அஜய் குமார், நீதிபதி பயன்படுத்தும் கார் மெக்கானிக் செட்டில் நிற்பதை கண்டுள்ளார்.இதனால் சந்தேகமடைந்த அவர் தனது நிறுவனத்தின் உரிமையாளரை தொடர்புகொண்டபோது, வேறு காரில் போலியாக நீதிபதியின் லோகோ மற்றும் கார் எண் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் காரை பறிமுதல் செய்தனர். மெக்கானிக் செட் உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், அப்துல் காதர் என்பவர் காரை விட்டு சென்றதாக கூறியுள்ளார். இதனையடுத்து அப்துல் காதர் யார்?, போலியாக கார் எண் மற்றும் லோகோவை பயன்படுத்தி அவர் மோசடியில் ஈடுபட்டாரா? என விசாரணை நடைபெற்று வருகிறது.