செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில், வீட்டின் மாடியை ஒட்டிச் சென்ற மின்கம்பியை பிடித்த சிறுவன், உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
புதுப்பாக்கத்தை சேர்ந்த சசிகுமார் - சகிலா தம்பதியின் மகன் பிரவீன்குமார். 13 வயதான பிரவீன் குமார், மழை பெய்ததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். இந்நிலையில், அருகே இருந்த வீட்டிற்கு சென்று சிறுவன் விளையாடிய போது, மொட்டை மாடியில் வீட்டை ஒட்டி சென்ற மின்கம்பியில் தவறுதலாக கையை வைத்துள்ளான். அப்போது மின்சாரம் தாக்கியதில் பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.