கைதிகளை சிறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க, சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள சிவகுமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி, தனது வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அங்கு பணம் மற்றும் நகையை திருடியதாகக்கூறி தாக்கியதாகவும், சிவகுமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறையில் உள்ள சிவக்குமாரை சந்தித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை
ஆய்வு செய்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு, கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டது. மேலும், குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கைதி சிவகுமாரை சேலம் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.