"ரூ.71,000-க்கு வட்டியோட ரூ.3 லட்சம்" தன் உயிரான காரை தூக்கிய அதிகாரிகள் - உரிமையாளர் எடுத்த முடிவு

Update: 2024-07-10 08:08 GMT

ரூ.71,000-க்கு வட்டியோட ரூ.3 லட்சம்"

தன் உயிரான காரை தூக்கிய அதிகாரிகள்

போராடிய உரிமையாளர் கடைசியில் எடுத்த முடிவு

ஷாக்கான போலீஸ், வங்கி அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கார் கடனை கட்டாததால் கார் உரிமையாளரையும் சேர்த்து காரை ஜப்தி செய்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்...

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வெட்டிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் முருகன்... இவர் தனது இன்நோவா காரின் ஆவணத்தை காட்டி கடந்த 2019 ஆண்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

தொடர்ந்து 2 ஆண்டுகள் கொரோனா ஊரங்கு போடப்பட்டதால் கார் வாடகை தொழில் முற்றிலுமாக முடங்கியது. இதனால் கடனை அடைக்க முடியாமல் முருகன் தவித்து வந்தார். இருப்பினும், அவ்வப்போது கிடைத்த வருமானத்தை வைத்து, கடந்த 2023-ம் ஆண்டு வரை வட்டியும் முதலுமாக சேர்த்து ரூபாய் 3 லட்சம் 99 ஆயிரம் செலுத்தி உள்ளார்.

இருப்பினும், மீதம் செலுத்தவேண்டிய ரூபாய் 71 ஆயிரத்துக்கு வட்டியும் முதலுமாக சேர்த்து ரூபாய் 3 லட்சம் அடைக்க வேண்டி இருந்தது. இதனை முருகன் கட்ட முடியாமல் திணறி வந்துள்ளார்.

இந்நிலையில், கடனை முழுமையாக கட்ட தவறியதாக கூறி வங்கி ஊழியர்கள் காரை ஜப்தி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். தொடர்ந்து கார் நிறுத்தும் இடத்துக்கு ஒரு பெண் வக்கீலுடன் வந்த ஊழியர்கள்.... காரை ஜப்தி செய்யப்போவதாக முருகனிடம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

ஆனால், முருகன் அதனை ஏற்க மறுத்து ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோர்ட்டு ஊழியர்கள் வந்தால் தான் காரை ஜப்தி செய்ய விடுவேன் என்று.... அங்கு பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம் முருகன் தெரிவித்தார். தொடர்ந்து நான் கடனை சரியாக கட்டி இருப்பதாகவும்... வங்கி ஊழியர்கள் என்னை ஏமாற்றுவதாகவும் முருகன் குற்றம் சாட்டினார்.

ஆனால், முருகனின் வாதத்தை ஏற்க மறுத்த போலீசார் மற்றும் ஊழியர்கள் காரை ஜப்தி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதற்காக பிரத்யேகமாக கொண்டு வந்த ஒரு வாகனத்தில் காரை இணைத்து இழுத்து செல்ல முயன்றனர். ஆனால், அந்த வாகனத்துக்கு முன்னால் நின்று கொண்டு காரை எடுத்து செல்வதை தடுத்து பார்த்தார் முருகன்...

தொடர்ந்து எவ்வளவோ போராடியும், அவர்கள் வாகனத்தை எடுத்து செல்வதில் உறுதியாக இருந்ததால், நானே காரை ஓட்டிக்கொண்டு கோர்ட்டுக்கு வருகிறேன் எனவும் கெஞ்சி பார்த்தார் முருகன்...

ஆனால் எதையும் காதில் கேட்காத ஊழியர்கள் காரை எடுக்க தொடங்கினர். முருகனும் தான் ஆசையாக வாங்கிய கார் ஜப்தி செய்து இழுத்து செல்லப்படுவதை பார்த்து சோகத்துடன், அதில் ஏறி டிரைவர் போல அமர்ந்து கொண்டார். இறுதியாக அந்த காருடன் சேர்த்து கார் உரிமையாளரையும் ஜப்தி செய்தது போல கொண்டு சென்றது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்