"ரூ.115 கோடி நிலுவை தொகை வழங்க வேண்டும்"... கலெக்டர் அலுவலகம் முன் கரும்போடு குவிந்த விவசாயிகள் - தஞ்சையில் பரபரப்பு
ஆரூரான் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய 115 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க கோரி கரும்புடன் தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் அருகே செயல்பட்டு வந்த ஆரூரான் சர்க்கரை ஆலை 2015-2018 வரை 115 கோடி ரூபாய் நிலுவைத்தொகை வைத்துள்ளதாக கூறிய விவசாயிகள், தங்களது பேரில் ஆலை நிர்வாகம் மோசடி செய்து கடன் பெற்றதாக குற்றம்சாட்டினர். ஆலையை மற்றொரு நிறுவனம் கையகப்படுத்திய நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் எனவும், அரசே அந்த ஆலையை ஏற்று நடத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தையொட்டி போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.