ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கொலைக்காக கூலிப்படையை ஒருங்கிணைத்தவர்களில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய மணிவண்ணனை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மணிவண்ணனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் ஒருவரான மணிவண்ணன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் உறவினர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மணிவண்ணன் தான் சொமேட்டோ ஊழியர் போன்ற உடையை கொடுத்து அவரது நண்பர்கள் ஐந்து பேரை திரட்டி ஆம்ஸ்ட்ராங் கொலை கச்சிதமாக முடிக்க உதவி புரிந்தது தெரியவந்துள்ளது. ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் உறவினர் என்பதால் இவர்கள் அனைவரும் இணைந்து கொலையை நிகழ்த்த போட்ட திட்டம் என்ன? பணம் கிடைத்தது எப்படி? என்ற கோணத்தில் மணிவண்ணனிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.