24 மணிநேரத்தில் 3 பேர் துடித்து பலி.. இந்த அறிகுறி தெரிந்தால் வெள்ளியங்கிரி செல்லாதீர்

Update: 2024-03-26 05:25 GMT

24 மணிநேரத்தில் 3 பேர் துடித்து பலி... 1,2,4வது மலையில் பக்தர்கள் கண்ட அதிர்ச்சி - இந்த அறிகுறி தெரிந்தால் வெள்ளியங்கிரி செல்லாதீர்

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் 3 பேர், கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியங்கிரி மலையும், அதன் சவால்களும் என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கோவை மாவட்டத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது இந்த வெள்ளியங்கிரி மலை... தென்கைலாயம் என அழைக்கப்படும் இந்த மலை உச்சியில்தான் அமைந்துள்ளது சிவன் கோவில்...

ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த மலையை நோக்கி படையெடுக்கின்றனர்.

3 ஆயிரத்து 500 அடி உயரமும், 6 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட 7 மலைகளை அடுத்தடுத்து உள்ளடக்கிய இந்த வெள்ளியங்கிரி மலையை கடந்து... இறைவனை தரிசிப்பது என்பது மிகப்பெரும் சவால் என்றே சொல்லலாம்...

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர்.

10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே இங்கு மலையேற அனுமதிகப்பட்டு வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை.

ஆபத்து என்ன என்பதையும் உணர்ந்து, கரடு முரடான பாதையையும் கடந்து, 7 மலைகளையையும் தாண்டி சென்றால், இறைவன் ஆசி பெற்று தங்களுக்கான மோட்சம் கிடைத்துவிட்டதாகவே எண்ணுகிறார்கள் பக்தர்கள்...

ஆனால், கடவுளை தரிசிக்க வரும் அதே வேளையில், துரதிர்ஷ்டவசமாக நிகழும் சில சம்பவங்களும் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மலையேறிய பக்தர்களில் 3 பேர், மூச்சுத்திணறி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹதாரபாத்தை சேர்ந்த சுப்பாராவ் என்பவர், நான்காவது மலையில் ஏறிக் கொண்டிருந்த நிலையில், திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு உயிரிழந்தார். அதேபோல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் முதலாவது மலைப்பாதையிலும், தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் இரண்டாவது மலை அருகே வழுக்குப்பாறை பகுதியிலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சக பக்தர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 3 பேரின் உடல்களையும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் மீட்டு, மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வனத்துறை அதிகாரிகள்...

ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி மலை ஏறி, மூச்சு திணறல், இருதய பாதிப்பு, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், மலைகளின் நடுவே மருத்துவ முகாம் வைத்து, பக்தர்களின் உடல்நலனையும் கண்காணித்து வருகின்றனர் வனத்துறையினர்...

இந்த சூழலில், வெள்ளியங்கிரி மலை ஏற விரும்பும் பக்தர்களுக்கு, வனத்துறையினர் அறிவுரைகளை வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதாவது, உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உள்ளிட்ட உடல் நலக்குறைவு உள்ளவர்கள், வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மலை ஏறிய பக்தர்களில் கடந்த மாதம் 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 3 பேர் என ஆகமொத்தம் நடப்பாண்டில் மட்டும் 5 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் 18 பேர் உடல் உபாதைகள் காரணமாக உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்