24 மணி நேரமும் இரைச்சல் சத்தம்.. முதல்வரின் தனிப்பிரிவிற்கு சென்ற புகார்
சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள குடியிருப்பு பகுதி அருகே, 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையால் அவதிக்குள்ளாவதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அப்பகுதி மக்கள் புகாரளித்துள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூரில் வசிக்கும் மக்கள் பலர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து நிலம் வாங்கி வீடு கட்டியுள்ளனர். அங்கு, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கலவை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆலை 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதால், இரைச்சல் சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் ஆலைக்கு சொந்தமான கனரக வாகனங்கள் பல வருவதால், கடும் சிரமத்துக்குள்ளானதாக கூறும் பொதுமக்கள், இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இந்நிலையில், இதற்கு பதிலளித்த தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியம், தனியார் தொழிற்சாலை ஒப்பந்த முறையில் வாடகைக்கு தான் செயல்பட்டு வருவதாகவும், ஒப்பந்தம் முடியும் தருவாயில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே, இன்னும் நான்கு மாதங்களில் ஆலையை காலி செய்து விடுவதாக ஆலை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.