குரங்கு அம்மை பரவல்; "அரியவகை கொப்புளங்கள் ஏற்பட்டால் உஷார்..!" - ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு

குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Update: 2022-05-24 03:10 GMT
குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. குரங்கு அம்மை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில், இதுவரை கண்டறியப்படாத தோலில் ஏற்படும் கொப்புளங்கள் உடையவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், அமெரிக்கா, இங்கிலாந்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவிடன் நாடுகளில் இருந்து கடந்த 21 நாட்களுக்கு முன்னர் தமிழகம் வந்த பயணிகளில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது அறிகுறி உள்ளவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும், தனிமைப்படுத்தி உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சளி மற்றும் கொப்புளங்களின் மாதிரிகளை உடனடியாக புனேவில் ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும் எனவும், அந்த ஆய்வில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால், கடந்த 21 நாட்களுக்கு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை உரிய கவனத்துடன் பின்பற்றி தொடர் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்