பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-10-27 06:27 GMT
கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரத்தில், செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் நேற்று மாலை 6 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்து சிதறத் தொடங்கின. அதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அருகில் உள்ள கடைகளுக்கும் தீ பரவியது. அங்கிருந்த பேக்கரியில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில், பேக்கரிக்கு டீ குடிக்க வந்த ஷா அலம், காலித், பஷிர், செம்பியன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். 
இவர்கள் தவிர, சஞ்சய் கோவிந்தன், தட்சிணா மூர்த்தி, நாசர், கோவிந்தராஜன், இந்திரா உட்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், நாசர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக அதிகரித்தது. மற்ற 10 பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.   

இதற்கிடையே, நள்ளிரவுக்கு மேலும் தீ எரிந்து கொண்டிருந்ததால், சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து பட்டாசுக் கடையும் பேக்கரியும் முற்றிலும் சாம்பலாகின. கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து போராடி தீயை அணைத்தன. மீட்பு பணியை கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, மேலும் ஒரு சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்ததால், சிமெண்ட் கூரை உள்ளிட்ட பொருட்கள் பல அடி தூரத்திற்கு பறந்து சென்று விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. 
தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்