எருமை மாடுகளை தாக்கி தப்பிய புலி - புலியை சுற்றி வளைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
ஆட்கொல்லி புலி நடமாட்டம் உறுதியானதால் கூடலூர் - மசினகுடி சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்றுவட்டாரத்தில் 4 மனிதர்கள், 30 க்கும் மேற்பட்ட விலங்குகளை தாக்கிக் கொன்ற T23 புலியை பிடிக்க வனத்துறையினர் கடந்த 21 நாட்களாக போராடி போராடி வருகின்றனர். தெப்பக்காடு - மசினகுடி சாலையில் வலம் வந்த புலிக்கு, கால்நடை மருத்துவர்கள் இரண்டு மயக்க ஊசி செலுத்திய பிறகும் பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மசினகுடி வனசோதனை சாவடி அருகே வனத்துறையினர் முன்பாக, மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாட்டை புலி தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதையடுத்து புலியை வனத்துறையினர் சுற்றி வளைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மசினகுடியில், புலி இருப்பது உறுதியாகியுள்ளதால், மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். உதயன் எனும் கும்கி யானை மீது அம்பாரி கட்டி, அதன் மேலிருந்து புலிக்கு மயக்க ஊசி செலுத்துவதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.