தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - வாக்கு எண்ணிக்கையில் சுவாரஸ்ய நிகழ்வுகள்
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....
விழுப்புரம்
விழுப்புரம் காணை ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்காளர் ஒருவர் அனைத்து சின்னங்களிலும் வாக்கை பதிவு செய்திருந்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பரந்தாமன் என்பவர் 464 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வல்லம்
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றிய 3-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட கோமதி பிரபாகர் 222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். சீட் கிடைக்காததால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட திமுகவை சேர்ந்த உமா ஸ்டாலின் தோல்வியை தழுவினார். இருவரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரிஷிவந்தியம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அரியலூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு எண்ணும் பணிக்கு வந்த அலுவலர் அயர்ந்து தூக்கியது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சிவபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் மாலதியும், அதிமுக வேட்பாளர் பூபாலன் என்பவரும் சரி சமமாக 461 வாக்குகளை பெற்றிருந்தனர். அப்போது மாலதிக்கு கள்ளத்தனமாக 4 வாக்குகள் சேர்த்து அவரை வெற்றிப்பெற செய்ய முயற்சி நடக்கிறது என எதிர்தரப்பினர் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட நதியா செல்லாத வாக்குகளால் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
நதியாவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திலகவதியும் சரிசமமாக 110 வாக்குகளை பெற்றிருந்தனர். அப்போது செல்லாத வாக்குகளாக ஒதுக்கப்பட்ட 5 வாக்குகளை ஆய்வு செய்த போது, நதியாவுக்கு விழுந்த இரு வாக்குகள் தவறுதலாக செல்லாதவையென அறிவிக்கப்பட்டது தெரியவந்தது.
மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் நெல்லி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வரதராஜும், குமாரசாமியும் சரிசமமாக 385 வாக்குகளை பெற்றிருந்தனர். அப்போது சீட்டு குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்ய அனுமதி கோரப்படதும் தேர்தல் அலுவலர், குலுக்கல் முறையை நடத்தினார். அதில், வரதராஜ் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.