17வது நாளாக தொடரும் புலி வேட்டை: வேறு வனப்பகுதிகளில் தேடுதல் பணி
கூடலூரில் 17ஆவது நாளாக ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் தேடி வரும் நிலையில், பொக்காபுரம் மற்றும் மாயாறு வனப்பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
சிங்காரா வனப்பகுதியில் கடந்த 7 நாட்களாக வனத்துறையினர் புலியை தேடி வந்த நிலையில், புலியின் கால்தடம் தென்படவில்லை. அங்கிருந்த 65 கேமராக்களில், T23 புலி தென்படாத நிலையில், வேறு இரண்டு புலிகள் மட்டுமே தென்பட்டுள்ளன. இதனால் புலி வேறு பகுதிக்கு சென்று உள்ளதா? அல்லது உடல்நிலை மிகவும் சோர்வாக இருந்ததால் வேறு புலிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்ததா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சிங்காரா வனப்பகுதியில், எந்த தடயமும் கிடைக்காதததால், மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட பொக்காபுரம் மற்றும் மாயார் பகுதிகளில் 4 குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிறிய பள்ளங்கள், நீரோடைகள் மற்றும் முட்புதர்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.