மேட்ரிமோனியலில் உள்ள பெண்களுக்கு குறி - திருமணம் செய்வதாக கூறி மோசடி

மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்திருந்த பெண்களை குறிவைத்து பழகி அவர்களிடம் பண மோசடி செய்த பலே ஆசாமியை போலீசார் கைது செய்தனர்....

Update: 2021-08-15 08:23 GMT
மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்திருந்த பெண்களை குறிவைத்து பழகி அவர்களிடம் பண மோசடி செய்த பலே ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த கானத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்காக மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்திருந்தார். இதை பார்த்த பெங்களூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சூர்யா என்ற 25 வயதான இளைஞர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தன் விருப்பத்தை கூறி உள்ளார். பின்னர் இருவரும் செல்போனிலும் பேசிக் கொண்ட நிலையில் அது விடுதியில் அறை எடுத்து தங்கும் வரை நீண்டுள்ளது.அப்போது அந்த பெண்ணிடம் நெருங்கியதை சூர்யா வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். திருமணம் செய்து கொள்ள போகிறவர் தானே என நம்பி தன் வாழ்க்கையை தொலைத்திருக்கிறார் அந்த பெண்.ஆனாலும் திருமண ஆசை காட்டிய சூர்யா, பெண் வீட்டார் நிலம் வாங்க வைத்திருந்த 7 லட்ச ரூபாய் பணத்தை நைசாக பேசி வாங்கி உள்ளார். அதன்பிறகு செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானார்  சூர்யா. பணத்தையும் இழந்து வாழ்க்கையையும் தொலைத்த அந்த பெண், கடைசியில் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதனடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. அப்போது நான் அவனில்லை பட பாணியில் கோவையில் இளம்பெண் ஒருவருடன் விடுதியில் சூர்யா தங்கியிருந்ததை அறிந்த போலீசார் அவரை பொறி வைத்து பிடித்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்த போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சூர்யா, இதுவரை 50 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. மேட்ரிமோனியல் தளத்தில் உள்ள பெண்களே இவரின் டார்கெட்டாம்..பெண்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசி பழகி, கடைசியில் அத்துமீறும் அவர், அதை வைத்து மிரட்டியே பணம், நகைகளை பறித்தும் வந்ததும் அம்பலமானது...
வெளியில் சொல்ல முடியாமல் பெண்கள் பலரும் புகார் அளிக்க முன்வரவில்லையாம். இருந்தபோதிலும் 7 பெண்கள் துணிச்சலாக புகார் அளிக்க முன் வந்ததன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெண்களிடம் சூர்யா அத்துமீறியதும் தெரியவந்ததை தொடர்ந்து  போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இதே வேலையாக இருந்த சூர்யா, இதுவரை 100 சவரன் நகைகளுக்கும் மேல் ஏமாற்றி பறித்துள்ளார். இந்த பணமெல்லாம் ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்து வந்தது என  தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். மோசடி செய்த பணத்தில் பாதாம், பிஸ்தா, முந்திரி என வாங்கி சாப்பிட்டு கட்டு மஸ்தான உடலை மெருகேற்றி வைத்திருக்கும் சூர்யா, அதையே தன் ஆயுதமாக்கி பெண்களை தன் வலையில் விழ வைத்திருப்பதும் அம்பலமாகி இருக்கிறது... 
சூர்யா மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த  போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். 
எல்லை கடந்த உறவு எப்போதும் ஆபத்து என்பதை மீண்டும் பெண்களுக்கு உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம்...
Tags:    

மேலும் செய்திகள்