தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி-தஞ்சை : முதலமைச்சர் விருதிற்கு தேர்வு
தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் விருதிற்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தின விழாவின் போது சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் விருதிற்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 25 லட்ச ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. சிறந்த நகராட்சிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடம் பிடித்த உதகைக்கு 15 லட்ச ரூபாயும், 2ம் இடம் பிடித்த திருச்செங்கோட்டிற்கு 10 லட்ச ரூபாயும், 3ம் இடம் பிடித்த சின்னமனூருக்கு 5 லட்ச ரூபாயும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த பேரூராட்சிகளாக கல்லக்குடி, மேலபட்டம்பாக்கம், கோட்டையூர் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. விருதிற்குத் தேர்வாகியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுதந்திர தின விழா அன்று முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்க உள்ளார்.