இயற்கை ஆக்சிஜனான வேப்பமரம் - மரங்களின் அவசியத்தை உணர வைத்த கொரோனா
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அடுத்த தலைமுறை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
கொரோனா பெருந்தொற்று நமக்கு கற்பித்த பாடங்கள் ஏராளம்... 2ஆம் அலையில் மக்களின் மூச்சை இழுத்து பிடித்து ஆக்சிஜனின் அவசியத்தை எடுத்துச் சொன்னதும் இதே கொரோனா தான்.
ஆக்சிஜனுக்காக அலைந்து திரிந்த போது தான் அதன் அவசியமும், நாம் செய்த தவறுகளுமே விளங்கியது... நம் கண்ணெதிரே இருந்த மரங்களை எல்லாம் வெட்டி விலையாக்கி விட்டு ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிலையை சந்தித்த தலைமுறை நம்முடையது.
ஆனால் இயற்கை நமக்கு கொடுத்த பெரும் செல்வமான வேப்பமரத்தை பற்றி பேச வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. மருத்துவ குணங்களும், ஆக்சிஜன் அதிகம் தரக்கூடிய தன்மையும் கொண்ட வேப்பமரம் நாம் உயிர் வாழ தேவையான அனைத்தையும் தருகிறது என்கிறார் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி பரசுராமன்.